தவெக தேர்தல் பிரச்சாரத்தில் அதன் தலைவர் விஜய், குழந்தைகளை ஈடுபடுத்திய செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், ரசனையற்றது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவினர் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்தனர் என்று குற்றச்சாட்டுக்கு தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகள் அல்லது கட்சிகளின் வேட்பாளர்கள் என எவராலும் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்த முடியாது. எனினும், பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பது குறித்து விவாதங்கள் நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொருட்களை வாங்குவது மற்றும் அரசியல் கட்சித் தலைவர் மீதான ஈடுபாடு ஆகிய இரண்டிலும் குடும்பத்தின் மீது குழந்தைகளின் செல்வாக்கு என்பது உலகம் முழுவதும் பெரும் விவாதத்திற்குரிய விஷயம் என சுட்டிகாட்டியுள்ள நீதிபதி, "பெற்றோர் குழந்தைகளை சமாதானப்படுத்துவது போலவே, குழந்தைகளும் வீட்டில் உள்ள பெற்றோரையும், பெரியவர்களையும் வழிநடத்துகிறார்கள்.
தற்கால நவீன சூழலில், பெற்றோரின் விருப்பங்களில் குழந்தைகள் பெரும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தனக்காகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொள்வது என்பது தேவையற்றது.
பெரியவர்களை அந்தக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி சம்மதிக்க வைக்கும் முயற்சியில் குழந்தைகளை ஈடுபடுத்திய முழு செயலும் ரசனைக் குறைவானது.
மேலும், அவர்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது பெற்றோர்களின் மோசமான வளர்ப்பு முறையையே காண்பிக்கிறது. அதைக் கொண்டு குழந்தைகளை வைத்து பிரச்சார ரீல்ஸ் தயாரிப்பது தரம் தாழ்ந்ததும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இதை தடை செய்வதா அல்லது தேர்தலை ரத்து செய்வதற்கான முகாந்திரமாக ஆக்குவதா என்பது குறித்து நாடளுமன்றம் பரிசீலிக்க வேண்டிய ஒரு விரிவான விவாதமாகும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.